2017ஆம் ஆண்டு, ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில், தற்போதைய தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டார்.
அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவபொம்மையின் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல் அலுவலர் அளித்த புகாரின்பேரில் அமைச்சர் பாண்டியராஜன் உள்பட மூன்று பேர் மீது தேசியக்கொடியை அவமதித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பாண்டியராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அமைச்சர் தொடுத்த வழக்கு இன்று நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பாண்டியராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பரப்புரையில் அவர் கலந்துகொண்டாரே தவிர பரப்புரையை அவர் ஏற்பாடு செய்யவில்லை எனவும், இதில் எந்த வகையிலும் அவருக்கு நேரடி தொடர்பில்லை எனவும் வாதிட்டார்.
தொடர்ந்து, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்குத் தொடர்பாக அரசுத் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தார்.