கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் , மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை எம்.பி, எம்.எல்.ஏ க்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரியும் ஆர்.எஸ் பாரதி தாக்கல் செய்த மனு, ு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆர்.எஸ். பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், முதலமைச்சர் என்ற அடிப்படையில் அவர் செய்ய வேண்டிய மக்கள் பணி குறித்தே பேசியதாகவும், அதற்கு ஜனநாயக ரீதியாக விமர்சிக்க உரிமை உள்ளதாகவும், தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கவில்லை எனவும் வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, ஜனநாயகரீதியாக எதிர்க்கட்சிகள் முதலமைச்சரை விமர்சிக்க உரிமை உள்ளது என கூறிய நீதிபதி, ஆர்.எஸ். பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை ஜூன் மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: சசிகலா நியமனம் ரத்து வழக்கை ஒத்தி வைத்து உத்தரவு