மாநிலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் கட்சிக் கொடிகள், தோரணங்கள், உயர் நீதிமன்றம் விதித்த தடையை மறந்த ஃபிளக்ஸ் பேனர்கள் என அரசியல் கட்சிகள் தேர்தல் திருவிழாவின் முற்பாதியை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான ஆளும் அதிமுகவும், திமுகவும் முன் எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில்தான், தமிழகத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னதாக, கடந்த வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையக்குழு, அரசியல் கட்சிகள், தலைமைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திவிட்டு சென்றிருக்கிறது. இதையடுத்து இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும், ஊரக, நகர, மாநகரப் பகுதிகளில் உள்ள பதற்றமான மற்றும் மிகப்பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த பட்டியலை, மாநில உளவுத்துறை, நுண்ணறிவுப் பிரிவு காவல்துறை, வருவாய்த்துறை இணைந்து தயார் செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, 5,417 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 1,223 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்படியே இம்முறையும், மாநில உளவுத்துறை, நுண்ணறிவுப்பிரிவினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து, பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 475 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், மிகப்பதற்றமானவையாக 157 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அப்பணியில் ஈடுபட்டுள்ள நுண்ணறிவுப்பிரிவு காவலர் ஒருவரிடம் நாம் கேட்டபோது, பதற்றமான வாக்குச்சாவடி மற்றும் மிகப்பதற்றமான வாக்குச்சாவடியை கண்டறிவது குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகக் கூறினார். அதன்படி,
பதற்றமான வாக்குச்சாவடிகளை எவ்வாறு கண்டறிவது?
- கடந்த தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு 75 விழுக்காட்டிற்கும் மேல் வாக்குகள் பதிவாகி இருத்தல்.
- வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறால் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு, மறுவாக்குப்பதிவுக்கு உள்ளான வாக்குச்சாவடிகள்.
- வாக்காளர் பட்டியலில் பலரது பெயர் இடம் பெறாமல் இருக்கக்கூடிய பகுதிகள்.
- வேட்பாளர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி, சலுகை வழங்கக்கூடிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகள்.
- கடந்த சட்டப்பேரவை தேர்தலில் குறைவான வாக்குப்பதிவு நடந்த வாக்குச்சாவடி.
ஆகியவை பதற்றமான வாக்குச்சாவடிகள் என்ற வரையறைக்குள் அடங்கும்.
மிகப்பதற்றமான வாக்குச்சாவடிகளை எவ்வாறு கண்டறிவது?
- சாதி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள்.
- சமூக மோதல் உண்டாகக்கூடிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகள்.
- அதிகப்படியான ரவுடிக் கும்பல் வசித்து வரும் இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகள்.
- கடந்த காலங்களில் தேர்தல் தொடர்பான கலவரங்கள் நடந்த பகுதிகள்.
ஆகியன மிகப்பதற்றமான வாக்குச்சாவடிகள் என்ற வரையறைக்குள் வரும்.
இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் தயார் செய்யப்படும் வாக்குச்சாவடிகள் பட்டியல், தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கேற்ப துணை ராணுவத்தினரும், தமிழக அதிரடி காவல்துறையினரும் குறிப்பிட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இதையும் படிங்க: இறந்ததாகக் கருதப்பட்ட நபர் இறுதிச்சடங்குக்கு வந்ததால் பரபரப்பு