சென்னை, கீழ்பாக்கம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை தலைமை அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு சிறப்புக் காவல்படை கூடுதல் இயக்குநர் ஜெயந்த் முரளி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள், கிருமி நாசினி, முகக் கவசங்கள் வழங்கினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயந்த் முரளி, "தமிழ்நாடு சிறப்புக் காவல் படை சார்பில் www.letsfightcorana.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து கரோனா காலத்தில் வருமானமின்றி தவிக்கும் பொதுமக்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு உதவி செய்து வருகிறோம்.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம் திருநெல்வேலி, மணிமுத்தாறு, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை முகாம்களை சுற்றியுள்ள பொதுமக்கள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என 11 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
ஆவடி காமராஜர் நகரில் உள்ள தொழுநோயாளிகள் காப்பகம், தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த வாத்திய இசைக்குழு மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருகிறோம்" என்றார்.