நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்துவதற்கு, அரசுத் தேர்வுகள் துறை பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறும் வகையில் வினாத்தாள் தயாரிக்கும் பணிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
அதேநேரத்தில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வினை எப்போது அறிவித்தாலும் அதனை நடத்துவதற்குரிய பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணியும் நடைபெற ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக, நடப்பு கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் வழக்கம்போல் ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் கடந்த 19ஆம் தேதி நேரடியாக வகுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நடத்துவதற்கு, அரசுத் தேர்வுகள் துறை தயாராகி வருகிறது.
அதன்தொடர்ச்சியாக, மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு அவர்களின் பெயர்களை சரிபார்த்து தலைமை ஆசிரியர்கள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உஷாராணி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'தமிழ்நாடு அரசு நடப்பு கல்வி ஆண்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான பெயர்ப் பட்டியலைத் தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
அதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் 2020இல் நடைபெற்ற பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தயாரிக்கப்பட்ட பெயர்ப் பட்டியலை அடிப்படையாகக்கொண்டு 2020-21ஆம் கல்வி ஆண்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஜனவரி 27ஆம் தேதி மதியம் முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் நடப்பு கல்வி ஆண்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தங்களின் பள்ளி மாணவர்களின் நிரந்தரப் பதிவு எண், பெயர், பிறந்த தேதி, பாடத்தொகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அந்தப் பெயர் பட்டியலில் மாணவர்களது பெயர், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், புகைப்படம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தங்கள் இருந்தால் அதன் விவரங்களை பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பின்னர், அரசிதழில் பதிவு செய்து, பெயர் மாற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டும் பத்தாம் வகுப்பு சான்றிதழ் உள்ளவாறு இல்லாமல், அரசிதழில் உள்ளவாறு பெயர் மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
பதினொன்றாம் வகுப்பில் ஒரு பள்ளியில் படித்த மாணவர், தற்போது வேறு பள்ளியில் சேர்ந்திருந்தால், அந்த மாணவரின் பெயரை தேர்வு எழுத சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், அவர் படித்த பாடம் மற்றும் பயிற்று மொழியில் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யப்படமாட்டாது.
பதினொன்றாம் வகுப்பு படித்து தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கப்பட இருந்தால் மட்டுமே, அந்த மாணவரின் பெயரினை நீக்கம் செய்திடலாம்.
பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் இருந்தால், அதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.
நடப்புக் கல்வி ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை அரசு பள்ளியில் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரத்து 517 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 2 லட்சத்து 8 ஆயிரத்து 533 மாணவர்களும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இருந்து இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 289 மாணவர்களும் என 8,22,393 மாணவ - மாணவியர்கள் மாநில பாடத்திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதுவார்கள் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: சசிகலா விடுதலை காலதாமதம் ஆகுமா? - வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?