தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கல்விக் கட்டணம் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து முடிவெடுக்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்தது. இந்த யோசனையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து கல்விக் கட்டணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவெடுக்கும் என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.
அரசு உதவி பெறாத பள்ளிகளில் இந்தாண்டு கல்விக் கட்டணத்தில் 75 விழுக்காட்டை மூன்று தவணைகளில் வசூலிக்க அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது 25 விழுக்காடு, பள்ளிகள் திறக்கும்போது 25 விழுக்காடு, அதற்கு அடுத்த மூன்று மாதம் கழித்து 25 விழுக்காடு கட்டணம் வசூலிக்க அனுமதித்துள்ளோம் என அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பள்ளி கட்டணம் தாமதமாக செலுத்தினாலும் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.