சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு வழங்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் நான்கு பேர் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத் தலைவர்களுக்கு கார் பரிசு
சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவர்களுக்கு கார் பரிசு வழங்கப்படும் என அப்போதைய தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.
அதனை நிறைவேற்றும் வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், ஈரோடு தெற்கு ஆகிய நான்கு மாவட்டத் தலைவர்களுக்கு புதிய இன்னோவா கிரிஸ்டா கார்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் நகரத்தில் தேர்தல் பணியில் சிறப்பாக பணிபுரிந்த 4 மண்டலத் தலைவர்களுக்கு, கோயம்புத்தூர் நகர பாஜக சார்பில் மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், "பாஜக சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது. ஆனால், திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக அறிவித்திருந்தது.
தற்போது, மூன்று மாதம் ஆகிறது. அந்த திட்டத்தை இன்னும் நிறைவேற்றவில்லை. எதையுமே நிறைவேற்றாமல் 100 நாட்கள் சாதனை திட்டம் என கொண்டாடுகிறது" என குற்றஞ்சாட்டினார்.