சென்னை: கொலை மிரட்டல் வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்ட ரமேஷ் என்பவர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், 2018 ஜூன் 5 அன்று ஏற்பட்ட மோதலில் சக கைதி விஜய் என்பவர் ரமேஷை கல்லால் தாக்கினார். படுகாயமடைந்த ரமேஷை மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரமேஷின் மனைவிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து கோயம்புத்தூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர், மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு அளித்த கடிதத்தின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்து ஆணையத்தின் புலனாய்வு டிஜிபியை விசாரித்து அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டது.
ஆணையத்தின் டிஜிபி அளித்த அறிக்கையைத் தொடர்ந்து நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், உயிரிழந்த ரமேஷின் மனைவி தங்கம் காருண்யாவுக்கு ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு அரசு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
சிறைக் கைதிகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும், அதைச் செய்ய சிறைத் துறை தவறிவிட்டது எனத் தெரிவித்துள்ள ஆணையம், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு சிறைக் காப்பாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நவ. 29இல் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்