தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
சென்னையில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியான பெரம்பூரில் வேட்புமனு பரிசீலனை துவங்கியது. வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவகத்தில் காலை முதலே வாக்குவாதத்துடன் தொடங்கிய வேட்புமனு பரிசீலனை கடைசியில் அடிதடியில் முடிந்தது.
காலையில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினியின் வேட்புமனுவில், பிழை உள்ளதாக கூறி அதிமுக ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அதன் பின்பு தேர்தல் பொது பார்வையாளர் ரஜித் துன்காணியா மற்றும் பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரன் ஆகியோர் பிரியதர்ஷினி வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.
அதன் பின்பு வெற்றிவேல் வேட்புமனு மீதான பரிசீலினை தொடங்கியது. மீண்டும் அதே அதிமுக ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவரது வேட்புமனு மீதான பரிசீலனை இறுதியாக மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். வெற்றிவேல் வேட்புமனுவில் பிழை உள்ளதாக கூறி அதை தள்ளுபடி செய்யவேண்டும் என கூச்சலிட்டனர். இதனைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர் வெற்றிவேல் வேட்புமனு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து அதிமுகவினர் தேர்தல் நடத்தும் தேர்தல் அறையிலேயே அமமுகவினர் மீது கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் சுயேச்சை வேட்பாளர் மீனா என்கிற பெண்மணியை காவல்துறை வாக்குவாதத்தில் இழுத்து வெளியே தள்ளினர். இதில் சுயேச்சை வேட்பாளர் மீனா மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு சரக துணை ஆணையர் சாய் சரண் தேஜஸ்வி அமளியில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். இரண்டு மணிநேர வாக்குவாதத்திற்கு பின் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரபட்டது. இறுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுகவினர் வெற்றிவேலின் வேட்புமனுவை ஏற்க கூடாது என்றும் அவரது பெயரை நோட்டீஸ் போர்டில் போட கூடாது என்றும் புகார் மனு கொடுத்துவிட்டு சென்றனர்.