சென்னை: கடந்த 2019 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக வருமான வரித்துறையினர் பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க, 2018ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாடு முழுவதும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதில், 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் தங்கத்தை வருமான வரித்துறையினர் 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
750 கிராம் தங்கம், பணம் என சேர்த்து இரண்டரை கோடி என வருமான வரி துறையினர் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக பினாமி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மூன்று ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பணம், தங்கம் வைத்திருந்தவர்கள், அது தங்களுடையது இல்லை என மறுத்ததாலும், உண்மையான உரிமையாளர்கள் வந்து உரிமை கோரவில்லை என்பதாலும், வருமான வரித்துறையினர் டெல்லியில் உள்ள வருமான வரி தீர்ப்பாயத்தில் இது குறித்து தெரிவித்தனர்.
இதனையடுத்து நாட்டிலேயே முதன்முறையாக தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், பணத்தை வருமான வரித்துறையினர் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்துள்ளனர். இனி அந்தப் பணத்தை யாரும் உரிமை கோர முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையில், அரசியல் பிரமுகர் ஒருவரின் பினாமியின் பணம்தான் என தெரியவந்தாலும், அது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை என்பது சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும் என வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்ற விசாரணையின் முடிவில், அதன் உண்மையான உடமைதாரர்களை ஆதாரங்களுடன் கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'பண மோசடி வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கவேண்டும்' - முத்தரசன்