புதுச்சேரி, தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் பாபு தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தனியார் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், வாகனத்தின் உள்ளே ஏராளமான பணம் கட்டுக் கட்டாக இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, பிடிபட்ட வாகனம், வங்கி ஏடிஎம்களில் பணத்தை நிரப்ப பயன்படுத்தும் தனியார் பாதுகாப்பு நிறுவன வாகனம் என்பது தெரிய வந்தது. ஆனால், நிறுவனத்தின் பெயர் ஏதும் வாகனத்தில் அச்சடிக்கப்படவில்லை. மேலும் பிடிபட்ட பணத்தின் மதிப்பு இரண்டு கோடி என்றும் தெரிய வந்தது.
இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது மன்சூர், வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், வாகனத்தின் உள்ளே பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 100, 200, 500 ரூபாய் கட்டுகளை தனியார் வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டு, வங்கிக்கு சொந்தமான கட்டடத்தில் வைக்கச் செல்வதாக வாகனத்தில் இருந்தோர் தெரிவித்தனர். ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடத்தில் இல்லை. ஆகையால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 989 பேருக்கு கரோனா!