செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வுசெய்யும் ஸ்டாலின்
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு பார்வையிடுகிறார்.
லக்கிம்பூர் வன்முறை: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் உழவர் நால்வர் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு குறித்த விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
உ.பி.யில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தைத் திறந்துவைக்கும் மோடி
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பன்னாட்டு விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார்.
ஆளுநரைச் சந்திக்கும் ஈபிஎஸ்
அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் நடத்திவரும் சோதனை தொடர்பாக, சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் காலை 11 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவியை, ஈபிஎஸ் சந்திக்கவுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்பு
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 28 மாவட்டங்களில் காலியாக இருந்த பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்கின்றனர். இந்தப் பதவி ஏற்பு விழா மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
பன்னாட்டு எண்ணெய் நிறுவன அலுவலர்களுடன் மோடி ஆலோசனை
பன்னாட்டு அளவிலான எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்கள், வல்லுநர்கடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
இன்று மழை பெய்யக்கூடிய பகுதிகள்
வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.