சென்னை: பெங்களூரைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான ஹரிஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் சுற்றித்திரிந்த 186 நாய்களில் 45 நாய்கள் உயிரிழந்ததற்கு உரிய பராமரிப்பு அளிக்கத் தவறிய பதிவாளர் ஜேன் பிரசாத் மற்றும் உடனிருக்கும் சில ஊழியர்களே காரணம் எனவும், அவர்கள் மீது மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் இருந்த 186 நாய்கள் உரிய பராமரிப்பின்றி இருட்டறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அதில் 45 நாய்கள் உயிரிழந்துள்ளது. மேலும் நாய்களின் உயிரிழப்புக்கு அவைகள் முறையாக பராமரிக்கப்படாமல், தகுந்த உணவளிக்காமல் இருந்ததே காரணம்.
அடைக்கப்படும்போது முழு ஆரோக்கியத்துடன் இருந்த நாய்களில் 45 நாய்கள் திடீரென உயிரிழக்க வேறெந்த காரணமும் இருக்க முடியாது. இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டதால், சுதந்திரம் இல்லாமலும், பயத்தாலும் அவற்றிற்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் 45 நாய்கள் உயிரிழந்துள்ளதை சென்னை ஐ.ஐ.டி-யின் பதிவாளர் ஜேன் பிரசாத் ஏற்கனவே உறுதிபடுத்தியுள்ளார்.
45 நாய்களின் உயிரிழப்பிற்கு சென்னை ஐ.ஐ.டி-யின் பதிவாளரான ஜேம் பிரசாத் மற்றும் அவருடன் இருக்கும் சில ஊழியர்களே இதற்கு பொறுப்பு. அவர்கள் மீது மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
வாயில்லா பிராணிகளை ஒரே இடத்தில் அடைத்து வைக்கக் கூடாது எனவும், அது அவற்றின் இனப்பெருக்கத்தை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டு மிருக நல வாரியம் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளதும், சென்னை ஐ.ஐ.டி-யில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு விளக்கம் கேட்டு ஏற்கனவே விலங்குகள் நல வாரியம் சென்னை ஐ.ஐ.டி, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IPL 2021 FINAL: தொடங்கியது இறுதிப்போர் - சென்னை பேட்டிங்