ஆவடி அருகே மிட்னமல்லியில் உள்ள மிட்னமல்லி ஏரியை தனியார் தொண்டு நிறுவனம் தூர்வாரி வருகிறது. இதுபோல் ஆவடி சேக்காடு ஏரியில் பொதுப்பணித் துறை சார்பில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''ஆவடி தொகுதியில் இதுவரை 28 ஏரி, குளங்களை அரசு புனரமைத்திருக்கிறது. தற்போது சேக்காடு ஏரி தூர்வாரும் பணி பொதுப்பணித் துறை சார்பில் 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. ஆவடி சுற்றுவட்டாரத்தில் உள்ள எட்டு ஏரிகளை 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை அடுத்த முதலமைச்சர் என்று கூறியிருப்பார் என நினைக்கிறேன். அது அரசியல் தலைவர்களுக்கு இயற்கைதான். அனைவருக்கும் கனவு காண்பதற்கு உரிமை உள்ளது.
ரஜினிகாந்த் போன்றோர்கள் அரசியலுக்குள் வந்தால், ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைப்பதற்கு கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
எங்களை பொறுத்தவரைக்கும் அதிமுக கூட்டணி கட்சிகள் அதே பலத்துடன் உள்ளது. சசிகலாவை பொறுத்தவரைக்கும் அவர் எப்போது வெளியே வருகிறார் என தெரியாது. என்ன நிலைப்பாடு எடுப்பார் என தெரியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: குற்றப்பின்னணி குறித்த விவரங்களை ஊடகங்களில் வேட்பாளர்கள் வெளியிட வேண்டும்!