தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, தினமும் கடைபிடிக்கப்படும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்தும், அதுகுறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "வங்கியில் அதிகப்படியான பணம் எடுப்பவர்கள் என்ன மாதிரி ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்கள் குறித்து வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமீறல் அமலுக்கு பின் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.12 கோடியே 80 லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ரூ.3 கோடியே 76 லட்சம் ரொக்கம், 94 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டவை குறித்து 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் 470 புகார்கள் வந்துள்ளன. அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இடைத்தேர்தலை பொறுத்தவரை வாக்கு எண்ணிக்கை மையங்கள் புதிதாக ஏதும் ஏற்படுத்தவில்லை. தேவைப்பட்டால் ஏற்படுத்தப்படும்", எனத் தெரிவித்தார்.