கரோனா வைரஸ் தொற்று சென்னையில் வேகமாகப் பரவி வருவதால், அந்தப் பரவலைத் தடுப்பதற்கு பரிசோதனை மேற்கொண்ட அனைவரும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்கவேண்டுமென சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் முடிவுகள் வரும்வரை தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி இருக்கவேண்டும் எனவும்; முடிவுகளில் கரோனா இல்லை என்றால் அவர்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம் எனவும் புதிய அறிவிப்பினை பிரகாஷ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொதுமக்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரையிலும் அவரது வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பரிசோதனை முடிவில் கரோனா தொற்று இல்லை என்றால், புதிய நடைமுறைப்படி அவர்கள் வழக்கம்போல் அவரது பணியைத் தொடங்கலாம்.
ஆனால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும், முகக்கவசம், கை உறை ஆகியவற்றை அணிய வேண்டும்.
மேலும் கரோனா பரிசோதனை முடிவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால், பரிசோதனை மேற்கொண்ட நபர், அவரது வீட்டில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி, மருத்துவமனைகளில் அல்லது கரோனா பாதுகாப்பு மையங்களில் அல்லது அவர்களின் இல்லத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.