மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் நாளை நடத்த திட்டமிட்டுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் டிஜிபி திரிபாதியிடம் இன்று புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ” நாளை முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை, பாஜக திட்டமிட்டுள்ள வேல் யாத்திரையால், மதக்கலவரம் தூண்டப்படும் என்றும், கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பும் உள்ளதால் அதற்கு தடை விதிக்கக்கோரி டிஜிபி திரிபாதியிடம் கோரினோம்.
பாஜக இதற்கு முன்பு நடத்திய கூட்டங்கள், யாத்திரைகள் பல, மதக்கலவரத்தில் போய் தான் முடிந்திருக்கின்றன. கடவுளை வைத்து அரசியல் செய்வதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இவை அனைத்தையும் டிஜிபியிடம் தெரிவித்தோம். அவரும் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என உறுதி அளித்துள்ளார். தமிழக அரசும் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
தமிழக மாணவர்களுக்கான மருத்துவ இடஒதுக்கீடு குறித்தோ, மநுஸ்மிருதியில் பெண்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது குறித்தோ பாஜக இதுவரை வாய் திறந்திருக்கிறதா? விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், சுற்றுச்சூழலுக்கு எதிரான சட்டம் என மக்கள் விரோதப்போக்கை மேற்கொள்ளும் பாஜக, தமிழக மக்களுக்காக ஒரு நல்ல திட்டத்தையாவது இதுவரை அறிவித்ததுண்டா? தமிழர்களுக்கு முருகனை பாஜகவினர் அறிமுகப்படுத்த தேவையில்லை. மத ரீதியாக மக்களை பிரிக்க நினைக்கும் வேல் யாத்திரை, தடையை மீறி நடக்குமானால், ஜனநாயக ரீதியில் எதிர்ப்போம் ” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மனு ஸ்மிருதி Vs திருமா : இரண்டாவது நாளாகத் தொடரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பரப்புரை இயக்கம்!