சென்னை: கிண்டியை அடுத்த ராமாபுரத்தில் உள்ள 27 ஏக்கர் பரப்பளவிலான ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்கக் கோரி ராமாபுரம் சமூக நல கூட்டமைப்பு 2019ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏரியின் 90 விழுக்காடு பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 10 விழுக்காடு இடம் மட்டுமே தற்போது ஏரியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
385 ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சித் தரப்பில், 300-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் அளிக்கும்படி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் பரிந்துரைத்துள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாற்று இடம் வழங்குவது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கை என்று அதிருப்தி தெரிவித்தனர். மேலும் கண்துடைப்பிற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை காரணமாகத்தான் வெள்ளமும், வறட்சியும் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
ராமாபுரம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும், 90 விழுக்காடு ஏரியை ஆக்கிரமிக்க அனுமதித்தது குறித்தும் தமிழ்நாடு பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னிலையாகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: திமுகவில் சங்கமமாகிறதா அதிமுக? - ஐ.பி.க்கு ஓபிஎஸ் சொன்ன 'நச்' பதில்!