இது தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில், ” பன்னாட்டு சிலைக் கடத்தல் கும்பல் மூலம், தமிழ்நாட்டில் உள்ள பழமையான சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இக்கடத்தலில் அரசியல்வாதிகள், காவல்துறை உயரதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய நபர்களுக்கு தொடர்புள்ளது.
சிலைக் கடத்தல் குறித்து பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் ’கேஸ் டைரி’ எனப்படும் விசாரணை விவர ஆவணங்களை காணவில்லை. இதனால் வழக்குகள் கைவிடப்பட்டு, வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துள்ளனர். எனவே, வழக்கு ஆவணங்கள் மாயமானது தொடர்பாக இங்குள்ள அதிகாரி விசாரணை நடத்தினால், அரசியல்வாதிகள், காவல்துறை உயரதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.
எனவே, பிற மாநிலங்களில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து, 41 வழக்குகளின் விசாரணை ஆவணங்கள் மாயமானது குறித்து உயர் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், விசாரணை ஆவணங்களைக் காணவில்லை என்ற அடிப்படையில் இந்த 41 வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வர தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு தடை விதிக்க வேண்டும் ” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை விவர ஆவணங்கள் மாயமான வழக்குகளில் விசாரணையை முடித்து வைத்த காவல் கண்காணிப்பாளர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என்றும், அதிகாரிகள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இதில் சுமார் 400 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இது முக்கியமான வழக்கு எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், இவ்வழக்கு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை இயக்குநர், சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பிணைக்காக மன்னிப்புக்கோர தயார் எஸ்.வி. சேகர் - கலாய்க்கும் இணையவாசிகள்!