தாம்பரம்: செங்கபல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில், அறிவு நம்பி என்பவர் அசோசோ (ASOSO)என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், மாத வாடகைக்கு வீடுகளை எடுத்து, அவற்றை வாடிக்கையாளர்களுக்கு லீசுக்கு கொடுத்து, அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் வசூலித்ததாக தெரிகிறது.
பெருங்களத்தூர், மறைமலை நகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு எடுத்து, லீசுக்கு விட்டதாகவும், வசூலித்த பணத்தை நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், 250க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மூன்று மாதங்களாக தொடர்ந்து வாடகை செலுத்தாததால், வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் வாடக்கைக்கு இருப்பவர்களை காலி செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து லீசுக்கு வீடு எடுத்த வாடகைதாரர்கள், அந்த நிறுவன அலுவலகத்திற்கு சென்றபோது, அறிவுநம்பி தலைமறைவானது தெரியவந்தது. பணத்தை பறிகொடுத்ததை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், தங்கள் குடும்பத்தோடு சென்று தாம்பரம் பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இதில் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து 10 கோடிக்கு மேல் பணம் பறிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருக்ககூடும் என்றும் தெரிவித்தனர். மேலும், தலைமறைவாக உள்ள நிறுவன உரிமையாளரிடமிருந்து தங்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: போலி இரிடியம் கடத்திய கும்பல்..! மடக்கி பிடித்த போலீசார்