சென்னை: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கே.எஸ். குருமூர்த்தி, அர்ஜுனன் இளையராஜா. இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அதில், இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்கள் இருந்தாலும், மசூதிகள், தேவாலயங்களை முறைப்படுத்த அரசு எவ்வித அக்கறையை காட்டாத நிலையில், இந்துக்கள் வழிபடும் கோயில்களை கட்டுப்படுத்த மட்டும் அறநிலையத்துறை சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு
இந்து கோயில்களை முறைப்படுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் அறநிலையத்துறை சட்டம் கொண்டு வந்த நோக்கம் மாறி, கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதாக மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் இருந்தாலும், கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும், நிதி முறைகேடு நடப்பதும், தவறாக பயன்படுத்தப்படுவதும் தொடர்கதையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
மேலும், மதச்சார்பற்ற நாடு என்று சொல்லுகின்ற நிலையில் இந்து சமயக் கோயில்களில் மீது மட்டும் ஆதிக்கம் செலுத்துவது என்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது. அறநிலையத்துறை சட்டத்தின் மூலம் கோயில்களை நிர்வகிப்பதில் எவ்வித தடையும் இல்லை என்றும், ஆனால் கோயில்களை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது என்பது அனுமதிக்க முடியாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை தள்ளி வைப்பு
இந்த மனு இன்று (ஆகஸ்ட் 17) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரானைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.பாஸ்கர் என்பவரும், அரசு தரப்பில் பி. முத்துக்குமார் என்பவரும் ஆஜராகினர்.
பின்னர் நீதிபதிகள், வழக்கு குறித்த ஆவணங்களை அரசுத் தரப்புக்கு வழங்க மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’எழுவர் விடுதலை குறித்து எங்களால் முடிவெடுக்க முடியாது’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை