கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஊரடங்கு மட்டும் போதாது எனவும், வைரஸைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்க வேண்டியது முக்கியம் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலைச் சுட்டிக் காட்டி, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், '138 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 10 லட்சம் மக்கள் தொகையில், 452 பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள 41 ஆய்வகங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டில் அறிவியல் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், 126 பி.சி.ஆர். ஆய்வகங்கள் இருக்கின்றன. அவற்றை முழு அளவில் பயன்படுத்துவதாக இருந்தால், 30 நாட்களில் 14 லட்சம் பேருக்கு சோதனை செய்ய முடியும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த ஆய்வகங்கள் தவிர, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் உள்ள பி.சி.ஆர்.ஆய்வகங்கள் எத்தனை என்பது குறித்து மத்திய அரசும், மாநிலத்தில் எத்தனை கல்வி நிறுவனங்களில் இந்த வசதிகள் உள்ளன என்பது குறித்து தமிழ்நாடு அரசும் அறிக்கை அளிக்கவும், அந்த ஆய்வகங்களை பரிசோதனைக்கு பயன்படுத்த உத்தரவிடவும் வேண்டும். 2013-14ஆம் ஆண்டு முதல் இரண்டு சுகாதார ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கியதில், என்ன கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்ற அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வு, நாடு முழுவதும் ஐ.சி.எம்.ஆர். திட்டத்தை தவிர்த்து, அணுசக்தி துறை, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் உள்ள பி.சி.ஆர். ஆய்வகங்களின் எண்ணிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, வழக்கை மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: அதி தீவிரக் கரோனா தாக்கத்தில் சென்னை - திரு.வி.க. நகரில் மட்டும் 324 பேர் பாதிப்பு!