பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை பட்டதாரி முதுகலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளில், ’ஒரு ஆசிரியர் மூன்றாண்டுகள் ஒரு பள்ளியில் பணிபுரிந்திருந்தால் மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூன்றாண்டுகளை கருத்தில் கொள்ளாமல் பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர்களாக சென்றவர்களையும் கலந்தாய்வுக்கு அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், நீதிமன்றத்தின் உத்தரவின்படி வழக்குத் தொடர்ந்த தலைமையாசிரியர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.