கரோனா காலத்தில் காவலர்கள் முன்களப் பணியாற்றிவருவதால், அவர்களது 12ஆம் வகுப்பு முடித்த பிள்ளைகளின் கல்லூரிப் படிப்பிற்கு உதவும் வகையில் சென்னை காவல் துறை ஆணையர் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.
சென்னை காவல் துறையில் பணிபுரியும் காவலர்களின் பிள்ளைகளில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் விரும்பும் பாடத்தை - விரும்பும் கல்லூரியில் படிப்பதற்கு அனுமதிச் சீட்டு வாங்கிக் கொடுத்துள்ளார்.
சுமார் 220 மாணவ மாணவிகளுக்கு சென்னையில் பல்வேறு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதில் 50 மாணவர்களுக்கு கிடைத்த கல்லூரி அனுமதிச்சீட்டை வழங்கும் நிகழ்வு ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய காவல் ஆணையர், "நீதிமன்றம், தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தியை கட்டுப்பாடுகளுடன் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் இந்து அமைப்புகளை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அழைத்து ஆலோசனை நடத்தினோம்.
அதில், அரசு விதித்த கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்போம் என இந்து அமைப்புகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
மேலும் தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம் எனச் சில இந்து அமைப்புகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவ்வாறு ஊர்வலம் நடத்த மாட்டோம் என இந்து அமைப்புகள் வாக்குறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று போதிய பாதுகாப்பிற்குத் திட்டம் வகுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், எதையும் எதிர்கொள்ள காவல் துறை தயாராக உள்ளதையும் குறிப்பிட்டார்.