அண்மையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், "குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 23ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
வன்முறையைத் தூண்டும்வகையில் இப்பதிவு உள்ளதால் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகாரளிக்கப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியினர், “தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை அடைய திமுக குறுக்கு வழியில் செயல்பட்டுவருகிறது. அதனால்தான் மாணவர்களைப் பயன்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கலவரத்தை தூண்டுகிறது.
உதயநிதியின் பதிவு, பேரணியில் திமுக நிச்சயம் கலவரத்தை செய்யும் வகையில் உள்ளது. ஏற்கெனவே இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மாணவர்கள் மூலம் நடத்தி ஆட்சியைப் பிடித்ததுபோல் தற்போதும் நினைக்கிறது. இதுபோன்று பதிவிட்ட உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் எனப் புகார் தெரிவித்துள்ளோம் “ என்று கூறினர்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணி தாக்கத்தை ஏற்படுத்தும் - ஸ்டாலின்