சென்னை: Temple Lands: திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ. ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பையூர் வீர ஆஞ்சநேய சாமி மற்றும் கோதண்டராம சாமி கோயில்கள், நாகமங்கலத்தில் உள்ள அனுமந்தராய சாமி கோயில்,
பாலேகுளி பட்டாளம்மன் மற்றும் பெரியமலை பெருமாள் கோயில், பழைய அரசம்பட்டி வரதராஜ பெருமாள் கோயில், கூலிகானபள்ளி காசி விஸ்வநாதர் கோயில் ஆகியவற்றின் சொத்துகள் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டும், தனியாருக்கு விற்கப்பட்டும் உள்ளது.
ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள்
இந்தக் கோயில்களுக்குச் சொந்தமாக தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நிலங்களும், தானமாக வழங்கப்பட்ட நிலங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன. மேலும், அறநிலையத்துறை அலுவலர்கள் வசதிக்கேற்ப தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாகமங்கலத்தில் தமிழ்நாடு அரசிடமோ, அறநிலையத்துறையிடமோ அனுமதி பெறாமல் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 40 ஆயிரம் சதுர அடி அளவிற்கு, 50 அடி ஆழத்திற்கு பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளன.
கிரானைட் பாறைகள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இச்செயல்கள் அனைத்தும் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பாக கடந்த மே மற்றும் நவம்பர் மாதங்களில் அளித்தப் புகாரில், பத்திரப்பதிவுத்துறையில் சேலம் உதவி ஐ.ஜி. பிறப்பித்த உத்தரவில் இந்த கோயில்களின் நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்யச்சொல்லியும் அறநிலையத்துறை வழங்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
பணம் அனுப்பியும் பயன்படுத்தவில்லை
கோயில் நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் வேலி அமைப்பதற்காக ரூ. 10 ஆயிரம் அனுப்பியும், அதைப் பயன்படுத்தவில்லை. இந்த ஏழு கோயில்களின் நிலங்களையும் பாதுகாக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளின் விவரங்களை வருவாய்த் துறை கேட்கும்போது, அதை வழங்குவதற்கு அறநிலையத்துறைக்கு என்ன தயக்கம்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், போதிய ஒத்துழைப்புத்தராவிட்டால் வருவாய்த் துறையால் மீட்பு நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை ஆணையர் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.
நீதிபதி உத்தரவு
மேலும், மனுதாரர் ராதாகிருஷ்ணன் அளித்தப் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தமிழ்நாடு அரசு, அறநிலையத்துறை, கோயில்களின் நிர்வாகம் உள்ளிட்டோர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை விசாரணையை ஜனவரி 4ஆம் தேதி தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை அனுபவித்து வருபர்கள் மீது நடவடிக்கை