6 முதல் 14 வயதுடையவர்களுக்கு கட்டாய இலவச கல்வி கிடைப்பதற்காக கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களில், ஒவ்வொரு ஆண்டும் 25% ஒதுக்கப்படுகிறது. அதற்கான மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஆனால், கரோனா தாக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணையை வெளியிடக்கோரி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், ”தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளைத் தொடங்கியுள்ளதும், கல்விக் கட்டணத்தில் 40 விழுக்காட்டை வசூலிக்கலாம் என ஜூலை 17 ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் இடம் கிடைக்கும் என நம்பியுள்ள பெற்றோரை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர். ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டாய கல்வி உரிமை இடங்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை விண்ணப்பிகலாம் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசின் அறிவிப்பு மக்களிடம் சென்றடையவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதனைப் பதிவுசெய்த நீதிபதிகள், கால அட்டவணையை ஆங்கிலம், தமிழ் நாளிதழ்களில் வெளியிட வேண்டும் எனவும், அந்த அறிவிப்பில் இந்த மாணவர் சேர்க்கையை கண்காணிக்கும் குழுவின் அலுவலர்கள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கட்டாய கல்வி உரிமைகள் சட்ட இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது எனவும், நிரப்பப்படாத இடங்களின் விவரங்களை பள்ளிவாரியாக வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: கவின்கலைக்கும் நாட்டியத்திற்கும் என்ன தொடர்பு?