நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த இரண்டு மசோதா மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்கல் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன எனவும், பின்னர் தமிழ்நாடு அரசுக்கு திரும்ப அனுப்பப்பட்டதாகவும் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய உள்துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 2017 ஜூலை 25ல் மசோதாக்களை திரும்பப் பெற்றதாக தமிழ்நாடு அரசு ஒப்புகை அளித்துள்ளதாக, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டியது குடியரசுத் தலைவரின் அரசியல் சாசன கடமை. நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகின்றன.
மசோதா திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என தெரிவித்தார். இதையடுத்து பேசிய நீதிபதிகள்,
- மசோதாக்களை நிறுத்தி வைத்ததாக மத்திய அரசு கூறுவதை, நிராகரிக்கப்பட்டதாகவே கருத வேண்டும்.
- மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை மாநில அரசு கேட்டுள்ளது. மத்திய அரசு இன்னும் காரணங்களை தெரிவிக்காத நிலையில் மசோதாவை திரும்ப அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி குடியரசுத் தலைவரை உயர் நீதிமன்றம் கேட்க முடியுமா?
- மசோதா நிராகரிக்கப்பட்டது குறித்து மாநில அரசு இதுவரை எந்த பதிலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை.
- மசோதா ஒரு முறை நிறுத்தி வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டால் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்ப எந்த தடையும் இல்லை
- அரசியல் சாசனத்தின்படி இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னை தொடர்பாகவும், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும்.
- மசோதாவை ஏற்பது, திருப்பி அனுப்புவது, நிறுத்தி வைப்பது குடியரசுத் தலைவரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. அதை கேள்வி கேட்க முடியாது
- மசோதா நிராகரிக்கப்பட்டதை சட்டப்பேரவைக்கு கூட தமிழக அரசு ஏன் அறிவிக்கவில்லை?
- 2017ல் திருப்பி அனுப்பிய போதும் இதுவரை மாநில அரசு அதுபற்றி தகவல் தெரிவிக்காதது ஏன்?
- இந்த கடிதம் பற்றி தனக்கு தெரியவில்லை என அமைச்சரோ, செயலாளரோ கூற முடியாது
என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.