மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்கான படுக்கைகள் ஒதுக்கீடுசெய்வது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
காணொலி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், ”தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தாமாகவே சேவை மனப்பான்மையுடன் முன்வந்து, அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை கரோனா நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளுக்கு ஒதுக்கி இந்தப் பேரிடர் காலத்தில் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மேலும், ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் உடனடியாகத் தங்கள் மருத்துவமனைகளுக்காக ஒரு பொறுப்பு அலுவலரை நியமித்து, அவர் மூலமாக அரசு கரோனா தடுப்புப் பணிகளுக்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ள ’https://stopcorona.tn.gov.in/’ இணையதளத்தின் வாயிலாக மருத்துவமனையில் உள்ள வசதிகள், படுக்கைகளின் எண்ணிக்கைகள், உள்நோயாளிகளின் எண்ணிக்கை, காலியாகவுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வப்போது வெளிப்படைத்தன்மையுடன் பதிவேற்ற வேண்டும்.
இதன்மூலம், பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் உள்ள வசதிகள், படுக்கை வசதிகள் ஆகியவற்றை அறிந்து, சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக அமையும்.
மேலும், இந்தப் பேரிடர் காலத்தில் பொதுமக்களிடமிருந்து அச்சத்தைப் போக்கி அரசு மீதும் தனியார் மருத்துவமனைகளின் மீதும் ஒரு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்கு!