சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியின்போது வைக்கப்பட்ட 2ஆயிரத்து 554 சிலைகள் இன்று (செப். 04) முதல் ஊர்வலமாகச்சென்று கடற்கரைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் காசிமேடு, நீலாங்கரை, திருவொற்றியூர், பட்டினப்பாக்கம் ஆகிய நான்கு கடற்கரைகளில் சிலைகளை கரைக்க காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்து வருகின்றனர். இதனால், இன்று காவல் துறை சார்பில் விநாயகர் ஊர்வலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துக் கடற்கரைக்குச் செல்லும் வழியில் காவல் துறை தடுப்புகளை அமைத்து பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் ஒவ்வொரு வாகனங்களாக அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைகள், உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உயர் கோபுரங்களில் இருந்தபடி கண்காணிப்பு பணிகளில் காவல் துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில், பொதுமக்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கரைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டினப்பாக்கம் கடற்கரையில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர், இணை ஆணையர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சிலையை கரைப்பதற்கு காவல் துறையினருடன், தன்னார்வலர்களும் இணைந்து சிலைகளை கரைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை பட்டினப்பக்கம் கடற்கரை பகுதியில் எடுத்துள்ளனர்.
அதிக எடை கொண்ட விநாயகர் சிலைகளை கிரேன் மூலம் தூக்கிக்கொண்டு கடலில் கரைத்தும், சிறியரக விநாயகர் சிலைகளை ட்ராலி மூலம் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்களும் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் யாரும் கடலில் இறங்க வேண்டாம் என காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலமும், எச்சரிக்கை பலகை மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியில் மட்டும் ஐந்து உயர் கோபுரங்கள் அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும், 32 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டும், எல்இடி திரையில் காவல் துறையினர் பொதுமக்களை கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்