தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு தற்போது வரை 120 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாக ’stopcorona.tn.gov.in’ என்ற மாநில சுகாதாரத்துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஒவ்வொரு தனியார் மருத்துவமனையிலும் எத்தனை காலி படுக்கைகள் உள்ளன, எத்தனை படுக்கைகளில் நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் போன்ற விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை ஆகியவையும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பெரும்பாலும், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்ட படுக்கைகள் காலியாகவே இருக்கின்றன.
சென்னையில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாரத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை, பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்ரீசத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷன், தாகூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிவற்றில் இதுவரை ஒரு நோயாளி கூட சேர்க்கப்படவில்லை.
அதேபோல், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், கரோனா சிகிச்சைக்காக 200 படுக்கைகள் இருந்தும், யாரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, கரோனா சிகிச்சைக்கென வசதிகளை மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பணிகள் முடிய சில நாட்கள் ஆகும் என்பதால், அதன் பின்னரே நோயாளிகளை அனுமதிக்க முடியும் என்கின்றனர்.
இது குறித்து மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து மாநில திட்ட இயக்குநர் கண்காணித்து வருகிறார் என்றும், அவருக்குத்தான் இது பற்றியான மேலதிக தகவல்கள் தெரியும் என்றார்.
இதையும் படிங்க: 'கரோனா ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை'