சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வுசெய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், “தமிழ்நாட்டின் நான்கு பன்னாட்டு விமான நிலையங்களும் பாதுகாப்பு வளையத்தில் உள்ளன.
8500 வெளிநாட்டுப் பயணிகள் நாள்தோறும் சோதனைக்குள்படுத்தப்படுகிறார்கள். மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, பொது இடங்கள் அனைத்திலும் விழிப்புணர்வுப் பரப்புரைகள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. தொடர் தும்மல், இருமல், காய்ச்சல் இருந்தால் மக்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கொரோனா சிகிச்சைக்கென மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் உள்ள ஆயிரத்து 243 பேரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளோம். 54 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கிடைத்த தகவலின்படி, 100இல் 0.2 விழுக்காடு பாதிப்பு இருக்கவும், பரவவும் வாய்ப்புள்ளது.
தொடர்வண்டி நிலையங்கள், துறைமுகங்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளோம். வெயில் அதிகமாக இருப்பதால் தமிழ்நாட்டில் கொரோனா பரவாது என உறுதியாகச் சொல்ல இயலாது.
அரசு கொடுத்த இலவச உதவி எண்களை மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் பயன்படுத்திவருகின்றனர். சென்னையில் ஒரு குழுவுக்கு 100 பேரும், மீதமுள்ள மூன்று விமான நிலையங்களில் 30 பேரும் மருத்துவக் கண்காணிப்புக் குழுவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கொரோனா அச்சம்: தன்னைத் தானே பூட்டிக்கொண்ட சீன இளைஞர்