கரோனா தடுப்பு ஒருங்கிணைப்புப் பணிக்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், " மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்து, முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் தவறான கருத்துகளைக் கூறியிருக்கிறார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அச்சத்துடன் உள்ள சூழலில், இதுபோன்ற தவறான கருத்துகள் தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது.
அரசு மருத்துவமனைகளில் சுமார் 5,000 படுக்கைகளும், மாநகராட்சியின் சார்பில் கோவிட் கேர் சென்டர்களில் 17,500 படுக்கை வசதிகளும் உள்ளன. மருந்தே இல்லாத நோய்க்கு என்ன குணாதிசயம் என்று கூட, தெரியாமல் சிறப்பான சிகிச்சையளித்து, குணமடைந்தவர்களின் விழுக்காடு 56ஆக உள்ளது. இந்த நிலையில், வரதராஜன் கூறிய கருத்து மிகவும் தவறானது.
தமிழ்நாட்டில் 6 நபர்கள் மட்டுமே வென்டிலேட்டரில் உள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் எவ்வாறு கஷ்டப்படுகின்றனர் என்பதை அறியாமல் வரதராஜன் பேசுகிறார். படுக்கைகள் தேவையான அளவு இருக்கும் போது, படுக்கைகளே இல்லை என்று கூறுவதில் என்ன ஆனந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. தவறான கருத்துகள் கூறிவருபவர்களை இனியும் அரசு பொறுத்துக்கொள்ளாது " என ஆவேசமாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "சென்னையைப் பொறுத்தவரை 39,600க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இவற்றில் 6,000 தெருக்களில் தான் பாதிப்புள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு வாரியாக, தெரு வாரியாக கரோனா தடுப்புப்பணிகளை அமைச்சர்கள் குழு கண்காணிக்கும்" எனக் கூறினார்.
பிறகு பேசிய கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், "தொற்று பாதித்துள்ள பகுதிகளில் வயதானவர்களைக் கண்டெடுக்க மருத்துவ முகாம் அமைத்து செயல்பட்டு வருகிறோம். பாதிப்புக்குள்ளானோரைக் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெருக்கடியான பகுதிகளில் இருந்த மக்களை, சமுதாய நலக் கூடங்களில் தங்க வைத்து உணவளிக்கப்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவமனைக்கு அழைத்து வந்து என்ன செய்வது? - எச்சரிக்கும் வரதராஜன்