இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிதீவிரமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் பெரியளவில் உள்ளது. இந்தத் தொற்றால் இதுவரை 23 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த நபர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களோடு கரோனா தொற்றும் சேர்ந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 23 பேரில் தொற்று உறுதி செய்யப்பட்ட முதலாவது நபர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பினார். எஞ்சியுள்ள 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டாவதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் ட்வீட் செய்துள்ளார்.
இரண்டு பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு அவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதால், இன்னும் இரு தினங்களில் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் எனவும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த நபர் டெல்லியில் இரு நாள்கள் இருந்துள்ளார். அப்போதே அவருக்கு கரோனா அறிகுறி இருந்ததன் விளைவாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, கடந்த மார்ச் 16ஆம் தேதி சென்னைக்குத் திரும்பியுள்ளார்.
சென்னையிலுள்ள தனது நண்பர்கள் அறையில் அவர் தங்கியிருந்த நிலையில், மீண்டும் கரோனா தொற்றின் வீரியம் அதிகரித்த உடன் சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அதன்பின் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்தனர்.
பின்னர் அவர் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து தற்போது நலமாகியுள்ளதால், அவர் வீட்டுக்குத் திரும்பவுள்ளார்.