சென்னை: தேனாம்பேட்டை பொது சுகாதாரத்துறை இயக்குநரக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த இரண்டு நாள்களாக வடகிழக்குப் பருவ மழை மிகப்பெரிய அளவில் பெய்து வருகிறது.
நேற்று (நவ.07) ஒரு நாள் இரவு மட்டும் 12 மணிநேரத்தில் 23 செ.மீ., மழை பொழிந்துள்ளது. 2008க்குப் பிறகு தற்போது பெய்த மழை மிகப்பெரிய அளவாகும். 45 நிமிடங்களில் 13 செ.மீ., மழைபொழிந்திருப்பது என்பது தமிழ்நாட்டில் மழை பொழிந்த வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாகும்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே மூன்று முறை சேவைத்துறை அலுவலர்களுடன் கூட்டங்கள் நடத்தி, என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்திட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். யார் யார் என்னென்ன பணிகளைக் கவனித்திட வேண்டும் என்று வரையறுத்துப் பணிகள் ஆற்ற முடிவெடுத்தார்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கூட்டம் நடத்தி நீர்நிலைகளை பராமரிப்பது, பாதுகாப்பது, நீர்நிலையின் அளவைவிட மழைநீர் மட்டம் உயரும்போது, அதன் அளவுக்கேற்ப மழைநீரை திறந்துவிடுவது போன்ற பல்வேறு பணிகளை உடனடியாக செய்ய வேண்டுமென்று நடவடிக்கை எடுத்தார்.
வரலாறு காணாத மழை
வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்கு பருவ மழையும் தமிழ்நாட்டிற்கு போதுமான மழைநீரை தந்துகொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவ மழை 70 விழுக்காடு அளவிற்கு நீர் ஆதாரத்தையும், தென்மேற்கு பருவ மழை 30 விழுக்காடு அளவிற்கு நீர் ஆதாரத்தையும் தமிழ்நாட்டிற்கு இதுவரை வழங்கிக்கொண்டிருந்தது.
ஆனால், இந்தாண்டு தென்மேற்குப் பருவ மழை பொழிவே 70 விழுக்காட்டைத் தாண்டிவிட்டது. தென்மேற்குப் பருவ மழையே 70 விழுக்காட்டைத் தாண்டிவிட்ட நிலையில், தற்போது வடகிழக்குப் பருவ மழை பெய்துகொண்டிருக்கிறது.
பருவ மழை பொழிவினால் ஆண்டொன்றுக்கு ஆயிரத்து 344 மி.லி., தண்ணீர் கிடைக்கும்.
ஆனால், வடகிழக்குப் பருவ மழை பொழிவிற்கு முன்னாலேயே அந்த அளவைத் தாண்டிவிட்டது. பூமியும் போதிய நீர்மட்டத்தை எட்டிவிட்டதாலும், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை இருந்துகொண்டிருக்கிறது. வடகிழக்குப் பருவமழை தற்போது அதிகளவில் பொழிந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை 30 நீரோடைகள் உள்ளன. மொத்த நீரும் கடலில் சேரும்போது கடல்மட்டம் உள்வாங்கவில்லை என்றால் கால்வாய்களில் நீர் நின்றுவிடும். தொடர்ந்து பெய்யும் மழை சில மணி நேரம் விட்டால் மட்டுமே நீர் செல்லும்.
முதலமைச்சர் நேரில் ஆய்வு
சென்னை மாநகராட்சியின் சார்பில் 720 கி.மீ., நீளத்திற்கு மிக முக்கிய கால்வாய்களில் தூர்வாரப்பட்டுள்ளது.
இதுவரை எந்த ஒரு முதலமைச்சரும், மாநகராட்சி சார்பில் கால்வாய்களை தூர்வாருவதை நேரில் ஆய்வு செய்ததில்லை. ஆனால் நம் முதலமைச்சர் செய்துள்ளார். ரோபோடிக் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரை அகற்றப்பட்டுள்ளது.
இன்று (நவ.09) ஒரே நாளில் மட்டும் 200இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தென் சென்னை, வட சென்னையில் இடைவிடாது 9 மணி நேரம் பல்வேறு இடங்களில் முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் இன்றும் வட சென்னை பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார்.
நிவாரண முகாம்களில் காலை மதியம் இரவு உணவு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு ஆட்சியர் அலுவலரை முதலமைச்சர் நியமித்துள்ளார். மாநகராட்சியில் சென்று முதலமைச்சர் ஆய்வு நடத்தியது இதுவே முதன்முறை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பல வெள்ள பாதிப்புகளை சந்தித்தாலும் எப்போதும் இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததால் பாதிப்புகள் குறைவாக இருக்கிறது. சென்னையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே அதிக பாரத்துடன் வளர்ந்திருந்த மரங்கள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தால் குறைத்து சரி செய்யப்பட்டன. பெரிய அளவில் மரங்கள் சாய்ந்ததாக எதுவும் இல்லை.
மழைக்காக 169 முகாம்கள் செயல்படுகின்றன. 40 முகாம்களில் 889 பேர் வந்தனர். ஆயிரத்து 303 அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மழை பாதித்த இடங்களில் இன்று ஒரு நாள் மட்டும் 3ஆயிரத்து 121அழைப்புகள் வந்தன. சென்னையில் 450 அழைப்புகள் வந்தன. டி.எம்.எஸ் வளாகத்தில் 230 ஆக்சிஸின் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
மழைகாலத்தில் ஆம்புலன்ஸ்கள் டீசல் போடுவதில் சிக்கல் இருக்கக்கூட்டாது என்பதற்காக டி.எம்.எஸ் வளாகத்தில் ஒரு வாகனத்தில் 6ஆயிரம் லிட்டர் டீசல் உள்ளது. மேலும் ஒரு வாகனம் வரவுள்ளது. சென்னை மாநகராட்சி பல்வேறு மழை வெள்ள பாதிப்புகளை பார்த்துள்ளது. அப்போது பெய்ததை விட அதிக அளவில் ஒரே நாளில் மழை பெய்துள்ளது.
எடப்பாடி vs ஸ்டாலின்
எதிர்கட்சி தலைவர் 4இடங்களை பார்த்து விட்டு பேட்டி கொடுத்துள்ளார். அவர் பார்வையிடுவதை வரவேற்கிறோம். ஆனால் தியாகராயநகரில் யாரும் வரவில்லை எனக்கூறுவது தவறு, விருகம்பாக்கம் மெட்டுக்குளம் பகுதியில் யாரும் வரவில்லை என்கிறார். அங்குள்ள மக்களுக்கு தீபாவளி தொடங்கிது முதலே உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்கிறார். இதுவரை செய்தாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கஜா உள்ளிட்ட புயலின் போது மழை நின்ற பிறகே எடப்பாடி பழனிசாமி சென்றார். ஆனால் மழை பொழியும் போதே முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்கிறார் . மக்கள் மனதார பாராடுகின்றனர்.
காய்ச்சல் , சளி, சேற்றுப்புண் உள்ளிட்ட நோய்களுக்கு 120கோடி மதிப்பிலான மருந்துகள் கையிருப்பு உள்ளது. மழையை தடுக்க இயலாது. மழையின் பாதிப்பை குறைக்கலாம். அப்பணியை அரசு சமாளிக்கின்றது. மழையினால் ஏற்படும் பாதிப்புகளை அரசு தடுக்கின்றது. தொடர் மழைக்காரணமாக கடலுக்கு நீர் செல்வதில் சுணக்கம் உள்ளது. அதனால் நீர் தேங்குகிறது. சில மணி நேரம் மழை நின்றால் நீர் குறைந்துவிடும்.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தூர்வாரி தூய்மைப்படுத்தியிருந்தால் பாதிப்பு குறைந்திருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் இதை அவர்கள் செய்யவில்லை. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 500 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மழைக்காலத்திற்கு பிறகும் கூட சிறப்பு முகாம்கள் நடத்தி தொற்றுநோய்கள் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: TN Rains: பருவமழையை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி: எடப்பாடி பழனிசாமி