கலைஞர் வாசகர் வட்டம் சார்பில், கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடத்தப்பட்ட கருத்தரங்கில், திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி, பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இது தொடர்பாக, ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஆர்.எஸ். பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மே 23ஆம் தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ். பாரதிக்கு, மே 31ஆம் தேதி வரை இடைக்கால முன்பிணை வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன் பிணையை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவையும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரான நாளில் பிணை வழங்க உத்தரவிடக் கோரி ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவையும் விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், இன்று தீர்ப்பளித்துள்ளார். அதில், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஆர்.எஸ். பாரதிக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால பிணையை ரத்து செய்ய மறுத்த, மத்திய குற்றப்பிரிவின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், ஆர்.எஸ். பாரதி சரணடையும் நாளன்றே அவரது பிணை மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கும் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிராக பிறர் தொடர்ந்த வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 10ஆம் தேதிக்கு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவில் காட்டும் அலட்சியம் வெட்டுக்கிளியிலும் வேண்டாம் - மு.க.ஸ்டாலின்