சென்னை: கோயில் சிலைகள், நகைகள் பாதுகாப்பு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 75-க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டது.
அவற்றில் 38 உத்தரவுகளை நடைமுறைப்படுத்திவிட்டதாகவும், ஐந்து உத்தரவுகள் மாநில அரசு தொடர்பில்லாதது என்றும், 32 உத்தரவுகளில் மறு ஆய்வுசெய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
370 கோயில்களுக்கு அனுமதி
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் கோரிக்கைகள் தொடர்பாக தொல்லியல் துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையில், கோயில், அதன் புராதன பொருள்கள் பாதுகாப்பு, புனரமைப்பு போன்றவை தொடர்பான வழக்குகளில் அமைக்கப்பட்ட குழுக்களின் ஒப்புதல் இல்லாமல் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் முன்னிலையாகி முறையிட்டார்.
ஆனால் நீதிபதிகள், கோயில்கள் சீரமைக்க உயர் நீதிமன்ற அளவிலான குழுவே 370-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.
கோயில்களைச் சீரமைக்க உயர் நீதிமன்ற குழுவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என இணையதளத்தில் வெளியிட முடியுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம்!