சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றிய ராஜராஜன், பேராசிரியர் பிரின்ஸ் ஆகியோர் மீது பெண் உதவிப் பேராசிரியை ஒருவர் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் உதவிப் பேராசிரியை பணிநீக்கம் செய்தது கல்லூரி நிர்வாகம்.
அவர் அளித்த பாலியல் புகாரை விசாரிக்க கல்லூரி நிர்வாகம் அமைத்த பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்துல் தொடர்பான விசாரணைக் குழு, இருவர் மீதான குற்றச்சாட்டு குறித்து முழுமையாக நீண்ட நெடிய விசாரணை நடத்தியது. விசாரணையை தொடர்ந்து அறிக்கையை 2013 ஏப்ரல் 13ஆம் தேதியன்று கல்லூரி நிர்வாகத்திடம் சமர்பித்தது. அந்த அறிக்கையில், ராஜராஜன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணமானதாக தெரிவித்திருந்தது.
இதனிடையே, பெண் உதவிப் பேராசிரியையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் துறைத் தலைவர் ராஜராஜன் 62 புகார்களை விசாரணைக் குழுவிடம் சமர்பித்ததோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் மத்தியில் பேராசிரியை மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், பாலியல் புகார் தெரிவித்த பெண் உதவிப் பேராசிரியை, கடந்த 2014ஆம் ஆண்டு எந்த காரணமும் தெரிவிக்காமல் பின்பற்றப்பட வேண்டிய எந்த நடைமுறைகளையும் கடைபிடிக்காமல் கல்லூரி நிர்வாகம் அவரது பணிநீக்க ஆணையை பிறப்பித்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய பெண் உதவிப் பேராசிரியை தான் அளித்த பாலியில் புகாரின் அடிப்படையில் ராஜராஜன், பிரின்ஸ் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார்.
அதில், 88 ஆண்டுகள் பழமையான லயோலா கல்லூரி நிர்வாகம் தனது புகார் குறித்து நேர்மையாக விசாரிக்காமல், தன்னை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் விசாரணையை ஒருதலைபட்சமாக நடத்தி இருப்பதாகவும், அதனால் சம்மந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், பாதிக்கப்பட்ட பேராசிரியைக்கு விசாரணை அறிக்கையை பெற அனைத்து உரிமையும் உண்டு எனவும், வழக்கு தொடர்ந்த காலத்தை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்ட பேராசிரியை சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரமும் உள்ளது எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம் 2013இன் படி நடவடிக்கை எடுத்துக்கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். இச்சட்டத்தின் பிரிவு 13இன் படி குற்றவாளிக்குத் தண்டனையை முன்னெடுத்தல், பணி இழப்பு, மன உளைச்சலுக்கான இழப்பீடு, மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றுக்கான பொருளாதார இழப்பீட்டைப் பெறுவதற்கான முழுச் சுதந்திரத்தையும் வழங்கி வழக்கை முடித்து வைத்தார்.