சென்னை: பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில் உள்ள கடைகளுக்கு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விநியோகம் செய்து வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். திரிசூலம் பகுதியில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஆய்வாளர் தயாள் தலைமையிலான போலீசார் கண்காணித்ததில் பல்லாவரம் ஈஸ்வரி நகர், சுரங்கப்பாதை அருகே ஆட்டோவில் குட்கா புகையிலை பொருட்களோடு வந்த நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 250 கிலோ குட்கா, புகையிலை பொருட்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இருவரும் ஆதம்பாக்கத்தை சேர்ந்த அக்பர் சுல்தான்(36), முகமது அலி ஜின்னா(36) என்பது தெரியவந்தது. பெங்களூரிலிருந்து புகையிலை பொருட்களை கொண்டு வந்து ஆட்டோ ஓட்டுவது போல் கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் கந்துவட்டி வசூலித்த திமுக முக்கிய பிரமுகர் கைது