சென்னை: குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் கப்பல் வழியாக கடத்த முயன்ற 3000 கிலோ ஹெராயினை கடந்த 18ஆம் தேதி மத்திய போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த போதை பொருளை ஆப்கானிலிருந்து ஈரானுக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை
இதனையடுத்து நிறுவனத்தின் ஜி.எஸ்.டி பெயரை வைத்து மச்சாவரம் சுதாகர், துர்கா, ராஜ்குமார் ஆகியோரை மத்திய போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சென்னையில் வைத்து கைது செய்தனர். மேலும் இவர்களை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது பல நாடுகளை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்தது.
இது தொடர்பாக சென்னை, நொய்டா, கோயம்புத்தூர், டெல்லி, அகமதாபாத், மந்த்வி, காந்திதம், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த நான்கு நபர்கள் உள்பட எட்டு பேரை மத்திய போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
என்.ஐ.ஏ-விற்கு மாற்றம்
இந்த நிலையில் 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கானது தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வழக்கில் பல நாடுகளுக்கு தொடர்புடையது என்பதாலும், ஆப்கான் தீவிரவாதிகளுக்கும் தொடர்பிருப்பதாலும் இந்த வழக்கானது என்.ஐ.ஏவிற்கு மாற்றப்பட்டிருப்பதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எடியூரப்பா நெருங்கிய உதவியாளர் வீட்டில் சோதனை!