கடலூர்: திட்டக்குடியைச்சேர்ந்தவர் பூமலை(52). சென்னை அசோக் நகர் 10ஆவது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். நேற்று இந்த குடியிருப்பு வாசலில் குடிபோதையில் அடையாளம் தெரியாத 4 பேர் படுத்துகிடந்துள்ளனர்.
இதனைக்கண்ட காவலாளி பூமலை அந்த 4 பேரையும் அங்கு இருந்து செல்லும்படி கூறினார். ஆனால், 4 பேரும் செல்லவில்லை. போதையிலேயே அவரை ஆபாசமாக திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் காவலாளி பூமலை படுத்திருந்த 4 பேர் மீதும் தண்ணீர் ஊற்றி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் கிடந்த தரை துடைக்கும்"மாப்" கம்பால் பூமலையின் தலையில் கொடூரமாகத் தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். படுகாயமடைந்த காவலாளி பூமலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி காவலாளி பூமலை இன்று அதிகாலையில் உயிரிழந்தார். இதையடுத்து குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இக்கொலை தொடர்பாக காவலாளி பூமலையின் மகன் பூபதி கொலை தொடர்பாக, குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை மட்டும் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:கோவையில் யானை தாக்கி குடியிருப்பு காவலாளி உயிரிழப்பு