இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'குரூப் - 4இல் அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 1.9.2019 அன்று நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் தற்காலிகமாகச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 24 ஆயிரத்து 260 விண்ணப்பதாரர்கள், 18.12.2019க்கு முன்னர் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இதுநாள் வரை பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான (அதாவது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட) விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மீதமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழ்களை வரும் 18ஆம் தேதிக்கு முன்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
சான்றிதழ் பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்கள், தங்களது நிரந்தரப்பதிவில், தாங்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் சரியாக உள்ளனவா? என்பதை சரிபார்த்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டாலும், சான்றிதழ்கள் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டியது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும்.
சான்றிதழ் தவறாகப் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலோ, தெளிவாக இல்லாமல் இருந்தாலோ அல்லது பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டிருந்தாலோ அவர்களது விண்ணப்பங்கள் தேர்வாணையத்தால் நிராகரிக்கப்படும்.
எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழ்கள் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நிரந்தரப்பதிவில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ் தவறாக அல்லது தெளிவில்லாமல் அல்லது பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பின், அவர்கள் சான்றிதழ்களை சரியான முறையில் 18ஆம் தேதிக்கு முன்னர் இ-சேவை மையங்கள் மூலமாக மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சான்றிதழ்கள் தவறாகப் பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து பெறப்படும் மனுக்கள், கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது' என அதில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: சேப்பாக்கம் மைதான ஒப்பந்தம் 21 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!