சென்னை: கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கானது கடைப்பிடிக்கபட்டுவருகிறது.
தமிழ்நாடு அரசின் கரோனா ஊரடங்கு விதிமுறைகளின்படி, மே 17ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் வெளியே சென்றாலும், மாவட்டங்களுக்குள் பயணிப்பதற்கும் இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, திருமணம், இறப்பு, மருத்துவம் சார்ந்த அவசரப் பணிகளுக்கு இ-பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், திருமணத்திற்காக செல்வோர் இ- பதிவு செய்து பயணம் மேற்கொள்வதில் தொடர் சிக்கல் நீடித்தது. அதுமட்டுமின்றி, இ-பதிவு இணையதளத்தில் இருந்து திருமணத்திற்குப் பயணம் என்ற பிரிவு நீக்கப்பட்டு பின்பு சேர்க்கப்பட்டது மக்கள் மத்தியிலி குழப்பத்தை ஏற்படுத்தியது.
இச்சூழலில் ஒரு காவல் நிலைய எல்லைவிட்டு, மறு காவல் எல்லைகளுக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக இருக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் சென்னை காவல் துறை நள்ளிரவில் அதிரடியாக அறிவித்தது.
இ-பதிவு செய்வதில் மக்களுக்கு தொடர்ந்து சந்தேகங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் மக்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1100 எனும் எண்ணுக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொண்டு மக்கள் தங்களது குழப்பங்களை தீர்த்து கொள்ளலாம்.
இதையும் படிங்க:
'கரோனாவுக்கு போட்டியாக புதிய நோய்' - கொள்ளை நோயான மியூகோர்மைகோசிஸ்