சென்னை: கரோனா பெருந்தொற்று காரணமாக 2020-2021ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் முறை குறித்து விளக்குமளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், "10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் 50%, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எழுத்துமுறையில் பெற்ற மதிப்பெண் 20%, 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் பெற்ற மதிப்பெண் 30% என எடுத்துக்கொள்ளப்பட்டு விகிதச்சாரா அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்.
விருப்பமுள்ள மாணவர்களுக்கு தேர்வு
12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பங்குபெறாத மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுதலாம். தனித்தேர்வெழுத விண்னப்பித்தவர்களுக்கு கரோனா தொற்று சீரானதும் தேர்வு நடத்தப்படும்.
ஜூலை 31ஆம் தேதிக்குள் ரிசல்ட்
இவ்வாறு கணக்கிடப்படும் மதிப்பெண் தமக்குக் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள், விரும்பினால் கரோனா பெருந்தொற்றுக்கு பின் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். ஜூலை 31ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்" என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி,
"கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மதிப்பீட்டு முறை இறுதி செய்யப்பட்டுள்ளது; அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தற்போதைய மதிப்பீடு முறை திருப்தி அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூபி க்யூபில் ஸ்டாலின் உருவப்படம்.. சிறுவனுக்கு பெரியார் சிலை பரிசு..