இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறும்போது,
“தமிழகத்தில் 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 139 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளும், 518 தனியார் கலை அறிவியல் கல்லூரிகளும், 14 அரசு கல்லூரிகளும், 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளில் 4 லட்சத்து 40 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் பணி துவக்கப்படும். தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் 10 வேலை நாட்கள் விண்ணப்பங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.
அதன்பின்னர் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து கல்லூரியில் உள்ள துறைகளுக்கான இடங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும்.
கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேருவதற்கு தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் தவிர்த்து, பிற பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்பட்டு தர வரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு வரை பள்ளிக் கல்வித்துறையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரத்து 200 மதிப்பெண்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு 600 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்துக்கான மதிப்பெண்கள் தவிர்த்து, பிற பாடங்களுக்கு உரிய 400 மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயார் செய்து வெளியிடப்படும். இதற்குரிய விதிமுறைகள் விரைவில் தமிழக அரசால் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 74 ஆயிரத்து 500 இடங்கள் உள்ளன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போதுமான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வி வாய்ந்த பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 வசூல் செய்யப்படும். விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.