புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் செய்திக் குறிப்பில், "கரோனா தீவிரமாக பரவி வரும் சமயத்தில் நேரத்தையும் பணத்தையும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக செலவிட வேண்டும்.
வாழ்க்கையை திரும்பப் பெற முடியாது. நாள்தோறும் நாம் மூத்தவர்களையும் நண்பர்களையும் குடும்பத்தினரையும் இழந்து வருகிறோம். இது மிகவும் துரதிஷ்டவசமானது. இது மிகவும் அபாயகரமான சூழ்நிலை, எனவே நாம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்காப்பு வழிமுறைகளை ஒருங்கிணைந்து பின்பற்ற வேண்டும்.
அரசு அலுவலர்கள், அதிகாரம் கொண்ட மக்கள் தலைவர்கள் இவ்விஷயத்தில் முனைப்பாக செயல்பட வேண்டும். முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது, சுகாதாரம் ஆகியவற்றையும் பின்பற்ற வேண்டும்.
அரசு அலுவலர்களை தங்கள் அறைக்கு அழைத்துப் பேசுவதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும். முடிந்தால் அலுவலர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்த முன்வர வேண்டும். பல அலுவலகங்கள் மூடப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைகளாக உள்ளதால் கரோனா பரவ காரணமாக அமைகிறது.
இதனால், சிலருக்கு தொற்று ஏற்பட்டதும் உறுதியாகியுள்ளது. அனைத்து அலுவலக தலைமையையும் தனிமைப்படுத்திகொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.