மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 20 விழுக்காடு ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு (MBC-V) வழங்கி இயற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி அளித்துள்ளார்.
அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீடு திருத்தச் சட்ட மசோதாவை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது.
அரசு கல்வி நிலையங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் பிப்ரவரி 26ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் சீர்மரபினருக்கு 7 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. குறிப்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (MBC-V) 'வி' என்ற பிரிவு வன்னியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது.
எம்பிசியில் உள்ள 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடும், சீர்மரபினருக்கு 7 விழுக்காடு உள் ஒதுக்கீடும் வழங்கப்பட உள்ளது. மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் இதரப் பிரிவினருக்கு 2.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது.
அதேபோல், இந்த 7 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை சீர்மரபினர் பிரிவில் 68 உள்பிரிவுகள் பெற்று பயனடையவுள்ளன. தமிழ்நாட்டில் மொத்த இட ஒதுக்கீடு 69 விழுக்காடாகும். அதில்,
- பிற்படுத்தப்பட்டோர் 30 விழுக்காடு,
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20 விழுக்காடு,
- பட்டியலினத்தவர் - 19 விழுக்காடு
என இட ஒதுக்கீடு தரப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு மாற்றம் தற்காலிகமானது என்றும் சாதிகள் குறித்த புள்ளிவிவர சேகரிப்புக்குப் பின் ஆறு மாதங்கள் கழித்து மாற்றியமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.