சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வுக்கு இணையாக மாநில அரசும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிதித்துறை மற்றும் பணியாளர் நலத்துறை செயலாளர்களை தலைமைச் செயலகத்தில் இரு பிரிவினராக தனித்தனியே சென்று சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆ.செல்வம், "கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கை இடம் பெறாததைக் கண்டித்து சுமார் 1000 அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று முதலமைச்சர் உத்தரவின்படி அரசின் நிதித்துறை செயலாளரை சந்தித்து ஒன்றிய அரசு வழங்கிய அக விலைப்படியை, மாநில அரசும் வழங்க வேண்டும், தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 11 விழுக்காடு அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
மேலும், மூன்று லட்சத்திற்கும் அதிகமான சத்துணவு, அங்கன்வாடி தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணிநிரந்தரம், சாலைப் பணியாளர்களுக்கு 41 வாரம் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், நான்கரை லட்சம் காலி பணியிடங்களையும் பூர்த்திசெய்து, 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தோம்.
முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நிதித் துறை செயலாளர் கூறினார். அவரது கருத்தை வரவேற்கிறோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம்.
ஒன்றரை ஆண்டுகாலமாக அகவிலைப்படி முடக்கப்பட்டுள்ளது. கரோனா நிவாரணமாக 150 கோடியை அரசு ஊழியர்கள் அரசுக்கு வழங்கி இருக்கிறோம். எனவே அக விலைப்படியை, வழங்குவதை அரசு செலவாக கருதக்கூடாது.
புதிய அரசு மிகச்சிறப்பாக கரோனாவை கையாண்ட நிலையில், அரசு ஊழியர்களும் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். கூட்டத் தொடர் முடியும் முன்பே கோரிக்கைள் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்.
செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாநில செயற்குழு கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம். போராட்டம்தான் எங்களின் ஒரே ஆயுதம் என்று கூறினார்.