நடப்பாண்டில் ஆயிரத்து 633 அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதும், 951 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு 6,692 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 1,633 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களில் 747 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 886 மாணவர்களும் தகுதி பெற்றனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இதற்காக, மாவட்டந்தோறும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கான பதிவை பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டனர். ஆனாலும் கூட 972 பேர் மட்டுமே விண்ணப்பித்து, பரிசீலனைக்குப் பிறகு 951 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் 313 பேருக்கும், பல் மருத்துவப் படிப்பில் 92 பேருக்கும் என 405 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாணவர்கள் செலுத்தி சேர்வார்களா என்பது கலந்தாய்வின் போதே தெரியவரும்.
இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் படித்து தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கல்வி கடன்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நடப்பாண்டில் சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடத்தப்படாமல், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ் மொழியை வளர்ப்பது நமது கடமை - ஓபிஎஸ்