ஈரோடு: பெருந்துறையில் தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியை, 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும், தற்போது கரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
இச்சூழலில், அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டும், தனியாா் மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணமே வசூலிக்கப்படுவதாகவும், அரசுக் கல்லூரியில் வசூலிக்கும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து தமிழ்நாடு அரசிடம் கோரிக்கையை முன்வைத்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல் 2 நாள்கள் கல்லூரி நுழைவாயில் முன்பு மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் கல்லூரி கலை அரங்கத்தில் அமர்ந்து 2 வாரங்களுக்கு மேலாக உள்ளிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருந்தனர். இந்நிலையில் பெருந்துறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிவசுப்ரமணியம், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதி அளித்திருந்தார்.
இத்தருவாயில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று (பிப்.20) பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அரசு கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் இனி ரூ.13,610 மட்டுமே வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியிலும் அரசுக் கட்டணம் வசூலிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.